புதன், டிசம்பர் 26

எங்கே அவள்

[வேலை அதிகம்  இருந்ததால் மிகபெரிய இடைவெளி விட்டுவிட்டேன ]
சுவையான ஒரு சொல்லும் காட்சி (பிளாஷ் பேக்).
-----------------------------------------------------------------------------------------------------------------------------

மிதி வண்டியின் சக்கரம்  டாலர் மதிப்பு வேகம் எடுக்கும் காலை  நேரம்.  கட்டுபாட்டை இழந்து தானாக செல்லுகிறது .

மண்பானை  செய்யும் சக்கரம் போல் சுழன்று சுழன்று ஒரே ஆர்பரிப்பாக  ஒரு இடத்தை சுற்றிவந்தது.

கடவுள் கை காட்டினாலும் நிற்காமல் ரிங்காரமிட்டு செல்லும் வேகம்.

குறுக்கே  பறந்த  சிட்டு குருவியும் சில யுகம் வீணடித்தது.
 
இடையே வரும் நண்பனின் குரல் ஐபோன் குறுஞ்செய்தி ஒலிபோல்  கரைந்து விட்டு சென்றது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஆன்சைட் கிடைத்தது போல் ஒரு மகிழ்ச்சி ஆம்  பார்த்து விட்டேன். 

மேகத்தை விவாகரத்து செய்துவிட்டு பச்சை நிற தாவணியில் வந்து ஒளிந்து கொண்ட நிலவு. 

கர்நாடகாவில் கட்டிய அனை  போல் குறுக்கே வந்ததார் பால் வியாபாரி.

ஐயோ தொலைத்து விட்டேன் என் விழியை. ஆயிரம் சம்மட்டியால் அடித்து நொறுங்கியது போல் ஒரு வலி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

 -----------------------------------------------------------------------------------------------------------------------------
மீண்டும் அந்த வாசனை இப்பொழுது கொஞ்சம் சுவாசிக்க முடிந்தது.   வந்தாள்  திரும்பி.  மெய்யாக புத்தகம் எடுத்து போகதான்  என்றாலும், ஒரு சாதித்த பெருமிதம்.

இளையராசாவின் இசை மிதி வண்டியின்  மணியால் சல்லடை ஆயிற்று. 

ஒரு பரவசம் எனக்குள் மீண்டும் தமிழகத்திற்கு மின்சாரம் கிடைத்து விட்டது.  ஆம் அவள் பார்வை பட்டு கரைந்தேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
வெளிநாட்டு முதலீட்டை போல் வந்தார் குருசாமி வாத்தியார். அழுத்தினேன் மிதிவண்டியை.

திரும்பி பார்த்தேன் என் சக்கர நாற்காலியில், வெளியே காபிடல் டவர் தெரிந்தது சீனர்களும் இந்தியர்களும் ஓடிகொண்டிருந்தார்கள்.

எங்கே அவள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------


சனி, ஜூலை 7

வண்ணத் தமிழ்


அது என்ன வண்ணத் தமிழ் ! மொழிக்கு கூட வண்ணம் உண்டா ! மொழி என்பது தகவல் பரிமாற தானாக உருவாகியது. மனிதன் மொழியை ரசித்து இலக்கணம் வகுத்தான். 

வட்டார மொழியும் எந்த ஒரு எழுத்துவடிவம் பெறாமல் பாமர மக்களால் சிறப்பிக்க பட்டது.  வைகை தமிழ் , நெல்லை கணிர் தமிழ், கொங்கு பசுமை தமிழ், வட மாவட்ட வீர தமிழ் என்று நீண்டு கொண்டே போகும்.


என் மொழியறியா வேற்று நாட்டவரிடம் உரையாட பொது மொழி தேவை பட்டது. வெறும் தமிழ் மட்டும் வைத்து கொண்டு எப்படி மற்றவரிடம் வேலை செய்வது என்று நமக்கும்,  தன் மொழியறியா தமிழர்களிடம் எப்படி பொருட்களை விற்பது என்று வேற்று மக்களுக்கும் சிக்கல் இருந்தது. அதுவே தொழில் சார்ந்த பொது மொழி வளர்ப்புக்கு வழிவகுத்தது.    

இன்று தொல்லை காட்சிகளில் வண்ண தமிழ் சுண்ணாம்பு சலவையில் துவைத்த எடுத்த வெண்ணிற ஆடை போல் வெளுத்து கொண்டிருகிறது.  தமிழ் படித்தால் என்ன பயன் எதாவது காசு பார்க்க முடியுமா என்று பல கேள்விகள் நம் மனதில் எழுவது  உண்மைதான். காசு பார்க்க வயிறு வளர்க்க மற்ற மொழி குறிப்பாக மேற்கத்திய மொழி அறிவு அவசியம். அதற்காக தமிழை ஒதிக்கி தள்ளுவது சரியா.

அசாதாரன காலகட்டத்தில் நமது மனம் எந்த மொழியில் சிந்திக்கும் ? மேற்கத்திய மொழியிலா ?

நான் மற்ற நாட்டவர்களை குறை சொல்வதாக எண்ண வேண்டாம். ஒரு மலையாளி பெரும்பாலும் அவன் மொழியில்தான்  உரையாடுகிறான். தெலுங்கர்கள் , குறிப்பாக வட இந்தியர்களும் அப்படித்தானே. தமிழன் மட்டும் ஏன் தன் மொழியில் பேச மறுக்கிறான். அதுவும் பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் நம் மக்கள் பொது இடங்களில் போடும் டமார் ! உவமை படுத்த வழியில்லை. 

இன்று நாட்டை கைப்பற்ற மன்னிக்கவும் காப்பாற்ற துடிக்கும் மெழுகுவர்த்தி வீரர்கள் கவனத்திற்கு, தேச தந்தை காந்தி தாய் மொழியில் தான் கல்வி கற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் (http://www.mkgandhi.org/edugandhi/education.htm )

தாய் மொழியில் கற்பது  நடை முறை சாத்தியம் இல்லாத சூழ்நிலை இன்று உருவாகி உள்ளது.  நண்பர்கள் தங்கள் செல்வங்களுக்கு ஓய்வு நேரங்களில் தமிழ் கற்று கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் நமது மொழியை காப்பற்ற முடியும். 

                             ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                             எழுமையும் ஏமாப் புடைத்து.
                


புதன், ஜனவரி 25

காணும் பொங்கலும் எருது ஆட்டமும்

தமிழன் பல்வேறு வகையில் தனது விழாக்களை கொண்டாடுகிறான். உழவர்  வெற்றி விழாவும் பல சுவைகளுடன் பூலோக ரீதியாக மாறுபட்டு கொண்டாடபடுகிறது. சேலம் மாவட்டத்தில் எருது ஆட்டமும் காணும் பொங்கல் ஒட்டி கிராமத்து மக்களால் ரசித்து நடத்த படுகிறது. அதை நண்பர்களுடன் பகிர இந்த இடுக்கை.  
 
சேலத்தில் அமைந்திற்கும் நைனா மலை பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது. நைனாகனூரில் உள்ள பழமையான பெருமாள் கோவில் நைனா மலையில் இருந்து பிரிக்கப்பட்டு அந்த கிராமத்து முன்னோர்களால் அமைக்க பட்டது. அதனால் இந்த ஊருக்கு நைனா கல் ஊர் என்ற பொருட் பெயர் வந்தது. 

காலை நேரத்தில் மக்கள் பெருமாளுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். நடமாடும் அங்காடிகளும் தற்காலிக அங்காடிகளும் கோவிலை சுற்றி குவிந்தன.  வண்ண வண்ண பலூன்கள் விற்கும் மிதி வண்டி அங்காடி, நாட்டு சுவை குளிர்பானம் விற்கும் தள்ளு வண்டி அங்காடி, தமிழ் அழகிகளின் கண்கவரும் அணி கலன்களை விற்கும் அங்காடி, குழந்தை களை மகிழ்விற்க பொம்மைகள் விற்கும் அங்காடி என்று பல அங்காடிகள் கோவிலை முற்றுகை இட்டன. 

மாலை நேரத்தில் எருது ஆட்டம் துவங்க பட்டது பல கிராமத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட எருதுகளை குளிப்பாட்டி மாலை அணிவித்து அழகு படுத்தி கோவிலை ஒட்டி உள்ள ஊர் மக்களின் பார்வைக்கு அழைத்து  வரப்பட்டது.

கிரமாத்து அழகிகள் எருது பிடித்து வரும் காளைகளை கடைகண் பார்வையில்  சிறை பிடிக்க முயற்சித்தனர்.  அதைகண்டு பறை இசை எழுப்பி வீர முழக்கத்துடன்  கிராமத்து இளம் விடலைகள்  மிகு உற்சாகமாக எருதை பிடித்து வந்தனர்.  பின்னர் அனைத்து எருதுகளும் பெருமாள் கோவிலின் முன் கூடின. 

அறுவடை முடிந்து சுத்தம் செய்ய பட்ட நிலத்தை மைதானம் போன்று பாவித்து  கரை ஓரம் மக்கள் இடம் பிடித்து நிற்கவும் அமரவும் செய்தனர். எருதுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெறி ஊட்டி மைதானத்தில் விரட்ட பட்டன.  வெறி ஊட்ட பெரும் ஓலி எழுப்பும் வெடிகளையும் மற்றும் பிசாசு போன்ற சோள காட்டு பொம்மைகளையும் பயன்படுத்தினர்.

கிராமத்து வாலிபர்கள் எருதின் கழுத்து பகுதில் கட்டப்பட்ட சுமார் பத்து அடி நீளம் கொண்ட கயிறை பிடித்து வேகத்துடன் வரும் எருதை கட்டுபாட்டிற்கு கொண்டு வந்தனர்.  மக்கள்  உறவினர்களை கண்டு நலம் விசாரித்தும் பலகாரங்களை உண்டு மகிழ்ந்தும் எருது ஆட்டத்தை ரசித்தனர்.   மதி நன்றாக எட்டி பார்க்கும் வரை ஆட்டம் தொடர்ந்தது.   


பின்னர் வானம் இருட்டிய பின் வீரர்களையும் விழா தலைவர் களையும்  தமிழ் இசை கருவிகள்  முழங்க அவர்கள் வீடு வறை சென்று வழி அனுப்பி வைத்தனர். மறுநாள் இறைவன் வழிபாட்டிற்கு பின் எருதுகள் பரிசு தொகை உடன் வழி அனுப்பி வைத்தனர். 

மானத்தாள் நல்லா கவுண்டன் (M.N) பட்டி புன்செய் விவசாயி சின்னராசு எருது பிடிப்பதை பற்றி பகிர்ந்தது (காணொளி தொடர்பு மீது அழுத்தவும்). கவுண்டன் என்ற தமிழ் அடை மொழிக்கு நல்ல உழவன் என்ற பொருளும் உண்டு.